கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க கோரி டி.ஐ.நாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக புகார் அளிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களை முறையாக கையாண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்ச வரம்பை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு, கருணையுடன் பரிசீலிக்கும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது என்று தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

Related Stories: