சாத்தூர் பகுதியில் ஒரு மாதத்திற்கு பின் தீப்பெட்டி ஆலைகள் திறப்பு: 50 சதவீத தொழிலாளர்கள் மட்டும் அனுமதி

சாத்தூர்:  சாத்தூர் பகுதியில் ஒரு மாதத்திற்கு பின், 50 சதவீத தொழிலாளர்களுடன் தீப்பெட்டி ஆலைகள் நேற்று திறக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பணி புரிந்தனர். தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை தடுக்க, கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. தீப்பெட்டி ஆலைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு கொரோனா பரவல் குறையாத 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை நேற்று முதல் அமல்படுத்தியது. இந்த மாவட்டங்களில் தீப்பெட்டி ஆலைகளை 50 சதவீத தொழிலாளர்களுடன் திறக்க அனுமதித்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பின் சாத்தூர் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் நேற்று திறக்கப்பட்டன. 50 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாதகாலமாக வேலையின்றி தவித்து வந்த தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பணி செய்தனர்.

Related Stories: