தமிழகம் முழுவதும் திடீரென கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு: கட்டுமான தொழில்கள் முடங்கும் அபாயம்; முதல்வர் தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண கோரிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் திடீரென கட்டுமான பொருட்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. மணலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமான தொழில்கள் அடியோடு முடங்கும் அபாபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு 9000 லோடு மணல் கட்டுமான பணிக்கு தேவைப்படுகிறது. சென்னையில் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு 3,000 லோடு தேவைபடுகிறது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் விற்பனை மூலம் மணல் விற்கப்பட்டது. இதனால், ஒரு லாரிக்கு ஆண்டுக்கு 3 லோடு மட்டுமே மணல் கிடைத்தது. இந்த பற்றாக்குறை காரணமாக கடந்த 2 ஆண்டாக 90 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் மணல் கிடைக்காததால் கட்டுமான பணிகள் தடைப்பட்டது. ஊரடங்கால் ஹார்ட்வேர்ட் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

இதனால், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கவில்லை. வேலை இல்லாததால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு சென்றனர். இந்த காரணங்களால் கட்டுமான பணிகள் முடங்கியது. இந்த நிலையில் தற்போது தளர்வுடன் கூடிய ஊரடங்கு நேற்று முதல் அமலானது. இதில் ஹார்டுவேர் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், பாதியில் நின்ற  கட்டிட பணிகளை தொடங்கலாம் என்று கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் நினைத்தனர். அவர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அதாவது கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. சிமெண்ட் ஒரு மூட்டை விலை ரூ.380லிருந்து ரூ.520 ஆக விலை உயர்ந்தது.

கம்பி(ஒரு டன்) ரூ.58,000லிருந்து ரூ.70,000 ஆக விலை உயர்ந்தது. ரூ.8,500-க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி  ரூ.9,500 ஆகவும், ரூ.23 ஆயிரத்துக்கு விற்ற 3 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட ஒரு  லோடு செங்கல் ரூ.28 ஆயிரமாகவும் அதிகரித்தது. பெயிண்ட் விலையும் தரத்துக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.60 முதல் ரூ. 100 வரை அதிகரித்து காணப்பட்டது. திடீரென கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்ததால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மணல் தட்டுப்பாடு, இந்த நிலையில் சிமெண்ட், கம்பி உள்ளிட்ட பொருட்களும் உயர்ந்துள்ளது சிறுக, சிறுக பணம் சேர்த்து வீடு கட்ட நினைப்பவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது:மணல் லாரிகளின் இயக்கம் குறைந்த காரணத்தால் சிமெண்ட், கம்பி விலையும் கடுமையாக உயர்ந்தது. கட்டுமான நிறுவனங்கள் மற்றும் 75000 மணல்லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டனர் 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டால் மத்திய அரசின் எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், தமிழக அரசின் கட்டுமான பணிகள், சென்னை தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், பிரதமரின் சிறிய வீடுகள் கட்டும் திட்டம்நடப்பதில் சிக்கல் உள்ளது. மணல் தட்டுப்பாடு, சிமெண்ட் உயர்வு போன்ற விவகாரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: