மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம்!: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அதிகமாகி வருவதால் மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போட காத்திருக்க வேண்டி உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென நீதிமன்றமும் முதல்வர் ஸ்டாலினும் அறிவுறுத்தினர். 

இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கணக்கில் கொண்டு மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஏற்கனவே உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து கொரோனா பரவல் தடுப்பு குறித்து விசாரித்து வருவதையும், அந்த வழக்கில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Related Stories: