போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதியமைச்சராக இருந்தபோது ஓபிஎஸ் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை: தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் தகவல்

சென்னை: தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:   திமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், உரிமைகள் அனைத்தையும் அதிமுக ஆட்சியின் போதுதான் பறிக்கப்பட்டன. அந்த காலங்களில் ஓபிஎஸ் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக துணை முதலமைச்சராகவும் இருந்த கால கட்டங்களில்தான் போக்குவரத்து தொழிலாளர்கள் எண்ணிக்கையை பேருந்து ஒன்றுக்கு 7.5 என்பதை 6.5 ஆக குறைத்தது. 1998ல் கலைர் கொண்டு வந்த ஓய்வூதிய திட்டத்தை முடக்கியது. 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை பறித்து, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 3 ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை 5 ஆண்டுகளாக மாற்றியது, அகவிலைப்படி நிலுவை, ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி நிறுத்தியது என பல்வேறு உரிமை, சலுகைகளை பறித்தது.

ஓய்வு பெற்றோர் பணப் பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததை கண்டித்து வேலை நிறுத்தம் செய்து ஓய்வூதியப் பலன்களை பெறுகிற அவலமும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்குகூட வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிர்பந்தமும் போக்குவரத்துத் தொழிலாளிக்கு ஏற்படுத்தியது அதிமுக ஆட்சிதான்.கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் சராசரி ஊதிய கணக்கீட்டை புகுத்தி ஊதியத்தை பறித்தது என பட்டியல் நீண்டு கொண்டே போகும். அப்போதெல்லாம் பொறுப்பில் இருந்த ஓபிஎஸ் மௌனம் காத்தது ஏனோ?. நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. நிதியமைச்சர் என்ற முறையில் தொழிற்சங்கங்கள் அளித்த கடிதங்களுக்குக் கூட பதில் அளிக்க முன்வரவில்லை. ஆட்சி அதிகாரம் பறிபோனதற்குப் பின்னர் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மீது பரிவும் பாசமும் காட்டுவது அரசியல் மட்டுமே.

Related Stories: