கொரோனா சிகிச்சை மையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் பள்ளிக்கூடங்கள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்  ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட டான்போஸ்கோ பள்ளியில் கொரோனா  சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, செம்பியம் தீயணைப்புத்துறை சார்பில் செம்பியம் நிலைய அதிகாரி செல்வன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

 இதில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு உடனே அணைப்பது, நோயாளிகளை எவ்வாறு அங்கிருந்து அப்புறப்படுத்துவது தீ விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்பட்டன. மேலும் தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் தீயணைப்புத்துறை வீரர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். இதன்மூலம் தற்காலிகமாக செயல்படும் மையங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை மருத்துவர்களும் செவிலியர்களும் திறம்பட எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என தீயணைப்புத் துறை வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: