பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; ரோஜர் பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி: ஜெர்மனி வீரருடன் 3.35 மணி நேரம் போராடி வென்றார்

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த 3வது சுற்று போட்டி ஒன்றில், 8ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (39),  27 வயதான ஜெர்மனியின் டொமினிக் கோய்பெருடன் மோதினார். அனுபவ வீரரான பெடரருக்கு டொமினிக் கடும் சவால் கொடுத்தார். டைப்ரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7(7)-6(5) என போராடி பெடரர் கைப்பற்றினார். 2வது செட்டும் டைப்ரேக்கர் வரை சென்ற நிலையில் டொமினிக் 7(7)-6(3) என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

3வது செட்டிலும் கடும் போட்டி நிலவியது. இதனை பெடரர் 7(7)-6(4) என தன்வசப்படுத்தினார். 4வது செட்டையும் 7-5 என பெடரர் கைப்பற்றினார். முடிவில் 7(7)-6(5), 6(3)-7(7), 7(7)- 6(4), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற பெடரர் 4வது சுற்றுக்குள் நுழைந்தார். 3 மணி நேரம் 35 நிமிடம் இந்த போட்டி நடந்தது. நேற்று நடந்த 3வது சுற்று போட்டிகளில் ஸ்பெயினின் நடால், செர்பியாவின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர். மகளிர் ஒற்றையரில் 17 வயதான அமெரிக்காவின் கோகோ காப், சகநாட்டைச் சேர்ந்த ஜெனிபர் பிராடியுடன் மோதினார்.

இதில் முதல் செட்டில் கோகா காப் 6-1 என முன்னிலையில் இருந்த நிலையில் பிராடி காயம் காரணமாக விலகினார். இதனால் கோகோ காப் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். துனிசியாவின் ஒன்ஸ் ஜாபூர், 3-6, 6-0, 6-1 என போலந்தின் மாக்தா லினெட்டை சாய்த்தார். கிரீசின் மரியா சக்கரி, 7-5, 6-7, 6-2 என பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை வீழ்த்தினார். போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் சோபியா கெனின், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் உள்ளிட்டோரும் 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

Related Stories: