கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின்போது பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை: கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தின் போது பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்தவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக மருத்துவமனை காணப்படும்.இந்நிலையில் கடந்த மே 26ம் தேதியன்று  இரவு பிரசவ வார்டில் உள்ள டாக்டர் அறையில் இருந்த ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. அப்போது ஏசியில் பயங்கர சத்தத்தடன் கரும்புகை வெளியேறியது.

 உடனே அறையில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தீ விபத்து ஏற்பட்டு விட்டது பத்திரமாக அனைவரும் வெளியேறுங்கள் என்று கூச்சலிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரசவித்த 36 பெண்கள் அலறி அடித்துக் கொண்டு தங்களது பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு வெளியில் ஓடிவிட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் தீ விபத்து ஏற்பட்டவுன்  ஜன்னல் கம்பியை உடைத்து தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைத்து இன்குபேட்டரில் உள்ள 36 பச்சிளங்குழந்தைகள் மற்றும் 11 குழந்தைகளுடன் தாய்மார்கள் என 47 பேரையும் தீயணைப்புப் படைவீரர்கள் வரும்  முன்னே, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து பத்திரமாக மீட்டார். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மேற்கொண்டு தீ பரவாமல் இருக்கும் வகையில் தீயை அணைத்தனர்.

மேலும் மருத்துவமனையில் தீ விபத்த நடந்தது குறித்து தகவல் அறிந்தவுடன், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பிரசவித்த தாய்மார்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் விபத்து நடத்த வார்டிலும் ஆய்வு செய்து இனிமேல் இதுபோன்று விபத்துக்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிரை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை நேற்றுநேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமார், மனைவி செவிலியர் தேவிகா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்.

Related Stories: