மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பத்மா சேஷாத்திரி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனு தள்ளுபடி: போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கைதாகி சிறையில் உள்ள, ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மற்றும் தற்போது பயின்று வரும் மாணவிகள் பலர் சமூகவலைதளத்தில் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து கடந்த 24ம் தேதி போலீசார் ராஜகோபாலனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், ராஜகோபாலன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கடந்த 27ம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ராஜகோபாலனிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்று வந்ததால், நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளி வைத்திருந்தார். தொடர்ந்து நேற்று முன் தினம் விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று ஜாமீன் மனு மீண்டும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் புலன்விசாரணை இன்னும் முழுமையாக முடியாததால் ஜாமீன் மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ராஜகோபாலன் தரப்பில் தரப்பில் வாதிடும் போது இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகள் ஏற்க தயார் என்று வாதிதப்பட்டது. பின்னர் இரு தரப்பு வாதங்களை கேட்ட  நீதிபதி முகமது பரூக்  விசாரணை முழுமையாக முடியாத நிலையில் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: