தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா: தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

தூத்துக்குடி:  தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தூத்துக்குடி டேவிஸ்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாதாந்திர பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு தனி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்ப்பிணிக்கு கடந்த 29ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தாய்க்கு கொரோனா இருந்ததால் குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் முதல் நாள் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. 5 நாட்கள் கழித்து நேற்று முன்தினம் அக்குழந்தைக்கு கொரோனா பரிசோதனை எடுத்ததில் தொற்று உறுதியாகி உள்ளது.

பச்சிளம் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு இதய துடிப்பும், சுவாசமும் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆபத்து இல்லை என்றும் தெரிவித்தனர். இருப்பினும் அக்குழந்தை, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில், ‘‘இன்குபேட்டரில்’’ வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 27 நாள் குழந்தைக்கு தொற்று: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 7ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சில தினங்களில் குழந்தையுடன் அந்த பெண் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் குழந்தையின் தாத்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கும் கடந்த 2ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பிறந்து 27 நாட்களான ஆண் குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

* கருப்பு பூஞ்சைக்கு 2 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் தற்போது 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கருப்பு பூஞ்சை தாக்கி 2 பேர் இறந்துள்ளனர் என்றார்.

Related Stories: