விசாரணை இன்னும் முடியவில்லை!: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜாமின் மறுக்கப்பட்டிருக்கிறது. அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக இருந்த ராஜகோபால், அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளில் ஆபாசமாக நடந்துகொண்டதாக மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். 

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ராஜகோபாலனை ஜூன் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, ராஜகோபாலனை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை தரப்பில்  சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டிருக்கிறார். 

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கேட்டு ராஜகோபாலன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்பு நடைபெற்றது. அச்சமயம் காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ராஜகோபாலன் மீதான விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது எனவும் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு  தெரிவித்தார். 

அதனை எதிர்த்து வாதாடிய ராஜகோபாலன் தரப்பு வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே காவல்துறையினர் ராஜகோபாலனை விசாரணைக்கு எடுத்து விசாரித்துவிட்டதாகவும், ஜாமின் வழங்கினால் நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முடிவடையாத சூழலில் தற்போது ராஜகோபாலனுக்கு ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Related Stories: