பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருள் கொள்முதலில் முன்னாள் அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதாதேவி 2,028 கோடி ஊழல்: லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்

சென்னை: தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதல் ெசய்ததில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் முன்னாள் இயக்குநர் சுதா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் 2,028 கோடி ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் சார்பில் ஆதாரங்களுடன் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் கடந்த 6 ஆண்டுகளாக கிறிஸ்டி ப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற்று வந்துள்ளது. பல ஆண்டுகளாக விநியோகம் செய்து வந்த நிறுவனங்கள் பங்கேற்க முடியாத வண்ணம் உள்ளது. பொருட்களை இந்த நிறுவனம் சப்ளை செய்ய வில்லை. அவர்கள் வேறு நிறுவனத்திடம் இருந்துதான் வாங்கிக்கொடுக்கின்றனர்.

கிறிஸ்டி நிறுவனம்  வெறும் பில் போடும் வேலையை மட்டும் செய்து, ரேஷன் கடைகளுக்கு அளிக்கும் பொருட்களில் கிலோவுக்கு 10 முதல் 30 வரை ஊழல் செய்துள்ளது.  உதாரணத்திற்கு, கனடா மஞ்சள் துவரம் பருப்பு டெண்டர்களில் கிறிஸ்டி நிறுவனம் பயன் பெறும் வகையில் டெண்டர் விதிகள் 2014 மற்றும் 2015ல் மாற்றி ஏதாவது ஒரு உணவு பொருட்கள் சப்ளை செய்த அனுபவம் இருந்தால் போதுமானது என்று மாற்றப்பட்டுள்ளது. முட்டை சப்ளை அனுபவம் இருந்த கிறிஸ்டி நிறுவனம் அனைத்து  பொருட்களை சப்ளை செய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பருப்பு மில் மற்றும் வியாபாரிகள் டெண்டரில் பங்கு பெற முடியாதபடி செய்துள்ளனர். ரேஷன் கடை சந்தை மதிப்பை விட 10 முதல் 30 வரை கிலோவுக்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளனர்.  மே 5ம் தேதி முடிவடைந்த பருப்பு டெண்டரில் கிறிஸ்டி குழுவினர் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்து ஒரு கிலோ துவரம் பருப்பு 143 முதல் 147 வரை ஒப்பந்தபுள்ளி தந்தார்கள்.

அதேபோல், ஒரு கிலோ கனடா மஞ்சள் துவரம் பருப்பிற்கு 139 முதல் 145 வரை ஒப்பந்தபுள்ளி கொடுத்தார்கள். ஆனால் இரண்டிற்கும் சந்தை மதிப்பு 100 விட குறைவாக இருக்கிறது. அந்த வகையில், கடந்த 6 ஆண்டுகளில் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 6 லட்சம் டன் பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு 870 கோடி. சர்க்கரையில் 2.7 லட்சம் டன் கொள்முதலில் 256 கோடி. கடந்த 4 ஆண்டுகளில் பாமாயில் வாங்கியதில் 56.56 கோடி பாக்கெட்டுகளில் கொள்முதல் செய்ததில் 902 கோடி இழப்பு.  குறைந்த பட்சமாக கிறிஸ்டி நிறுவன ஊழலால் மட்டும் தமிழக அரசுக்கு 2,028 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை அமைச்சர் காமராஜ், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சுதாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கிறிஸ்டி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: