தமிழகத்தில் அதிகரிக்கும் தள்ளுவண்டிக் கடைகள் வியாபார போட்டியால் விலை குறையும் பொருட்கள்: கடைகளாக மாறிய வாடகை வாகனங்கள்

சென்னை:   கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போது, வியாபாரிகள் பலர் மளிகை பொருட்களின் விலையை அதிக விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பார்ப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்களிடம் இருந்து வந்தது. ஆனால், தமிழக அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கையால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதோடு தங்கு தடையின்றி கிடைத்து வருவதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  கடந்த 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்காக அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்கு தேவையான பொருட்களை மக்கள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். எனவே மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, காய்கறி, மளிகை போன்ற பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக கிடைக்கும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

உள்ளூர் கடைக்காரர்களிடம் சீட்டு எழுதி கொடுத்து மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதேநேரம் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீடுகளுக்கு முன்பே வாங்கிக் கொள்ளும் வகையில் நடமாடும் தள்ளுவண்டிகள் மூலம் சென்று விற்பனை செய்யவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது.   இதற்கு மாநகராட்சி மற்றும் அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதி கோரி ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அதன்படி தொடக்கத்தில் 1000 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 5000க்கும் அதிகமான வண்டிகள் மூலம் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதிக விலையிலும் விற்பனை செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

  ஏனென்றால், ஒரு வார முழு ஊரடங்கு என அறிவித்த போது, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதற்காக போட்டிப்போட்டனர். அதை பயன்படுத்தி சிலர் காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அப்போது காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசும், வணிகர் சங்கங்களும் எச்சரித்தது. ஆரம்பத்தில் குறைந்த அளவே தள்ளுவண்டிகளில் விற்பனை செய்தனர். அவர்கள் மொத்தமாக பர்சேஸ் செய்து விற்பனைக்கு கொண்டு வருவதற்குள் எம்ஆர்பி விலையை விட சற்று கூடுதலாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இப்போது தள்ளுவண்டிகள் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருவதால் ஒவ்வொரு தெருக்களிலும் இரண்டுக்கும் மேற்பட்ட வண்டிகள் செல்கிறது. மேலும், சிறிய வகை லோடு வாகனங்கள் அனைத்தும் நடமாடும் கடைகளாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து தெருக்களிலும் இந்த வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அவர்களிடையே ஏற்பட்டுள்ள விற்பனை போட்டியால் காய்கறி மற்றும் மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. இதனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தவிர்த்து வருவதால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: