கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே மாதத்தில் 17 விமானிகள் பலி

புதுடெல்லி: கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்த மே மாதத்தில் 3 விமான சேவை நிறுவனங்களைச் சோ்ந்த 17 விமானிகள் தொற்று பாதித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தொற்று பாதிப்பால் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள் வரிசையில் விமானிகளின் சேவையும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், அவர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். அதன்படி, ஏா் இந்தியா நிறுவன விமானிகள் 5 பேர், இண்டிகோ விமானிகள் 10 பேர், விஸ்டாரா விமானிகள் இருவர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர்.

இண்டிகோ நிறுவனம் தனது 35,000 ஊழியர்கள் மற்றும் களப் பணியாளர்களில் சுமார் 20,000 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளது. அந்த நிறுவனம் வகுத்துள்ள ஊழியர்கள் நலத் திட்டத்தின் கீழ், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு நல நிதியாக தலா ரூ.5 கோடி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளது. கொரோனா முதல் அலையின்போது தனது நிறுவனத்தில் குறைந்த விமானிகளுக்கே தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2வது அலையில் சுமார் 450 விமானிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுமார் 99 சதவீத ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை போட்டதாக விஸ்டாரா நிறுவனம் தெரிவித்த நிலையில், ஏர் ஏஷியா நிறுவனம் தனது ஊழியர்களில் சுமார் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுள்ளதாக கூறியுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மே 15ம் தேதியிலிருந்தே தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Related Stories: