தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வரும் 30ம் தேதி வரை அவகாசம்: கொரோனா ஊரடங்கால் ஒரு மாதம் நீட்டிப்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி செலவு கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30ம் தேதி கடைசி நாளாகும். தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மே 2ம் தேதி தான் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 5 மாநிலத்திலும் புதிய அரசு பொறுப்பேற்று விட்டது.

பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தங்களது தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய ஜூன் 1ம் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் சுயேச்சை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் செலவு கணக்கை தாக்கல் செய்தனர். எனினும் நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வீசுவதால் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டுமே சுழற்சி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்கள் அத்தியாவசிய பணிகளை மட்டுமே தற்போது மேற்கொண்டு வருகின்றனர். எனவே வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தாலும் அதை சரி பார்த்து ஒப்புதல் அளிப்பதற்கான சூழ்நிலை இல்லாத நிலை உள்ளது. எனவே தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் (கலெக்டர்கள்) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதன்படி தேர்தல் செலவு கணக்கை வேட்பாளர்கள் ஜூன் 30ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். தற்போது கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தேர்தல் செலவு கணக்கு முழுவதையும் வெளி மாநில செலவு கணக்கு பார்வையாளர்களுக்கு அனுப்பி வைத்து, ஆன்லைனில் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கலாமா என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: