தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகையாக இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம், 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; 2,09,81,900 அரிசி அட்டைதாரர்களுக்கு கிடைக்கும்

சென்னை: தமிழகத்தில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்தொகை இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரம்  வழங்கும் திட்டத்தையும், 14 அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்றால் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களை போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் கலைஞர் பிறந்த நாள் முதல் ரூ.4000 வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின்  உறுதியளித்திருந்தார்.

அதன்அடிப்படையில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் ரூ.4196.38 கோடி செலவில், மே மாதத்தில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கான முதல் தவணை ₹2000 வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 10ம் தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது ஜூன் மாதத்தில் ரூ.4196.38 கோடி செலவில் 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகைக்கான இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  

மேலும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகள் மூலம்  ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 28ம் தேதி அறிவித்தார். அந்த அறிவிப்பிற்கிணங்க, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில், 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை,1/2 கிலோ சர்க்கரை, 500 கிராம் உளுத்தம் பருப்பு, 250 கிராம் புளி, 250 கிராம் கடலை பருப்பு, 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 200 கிராம் டீ தூள், குளியல் சோப்பு மற்றும் துணி சோப்பு அடங்கிய 14 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்  முகமது நசிமுத்தின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆனந்தகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: