பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் 11,12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது 100% உண்மைதான்: சக ஆசிரியர்கள் போலீசில் வாக்குமூலம்; 3வது நாள் விசாரணையில் பரபரப்பு தகவல்

சென்னை: பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவிகளுக்கு ராஜகோபாலன் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை தான் என்று, அதே பள்ளியில் உடன் பணியாற்றி வரும் பொருளாதார ஆசிரியர் உட்பட சக ஆசிரியர்கள் 3வது நாள் விசாரணையில் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர். ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணமாக பத்மா சேஷாத்திரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் பாடம் எடுப்பதாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதியானது. அதை தொடர்ந்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில்,  ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 35க்கும் மேற்பட்ட போலீசார் புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் குற்றச்சாட்டு வைத்த ஆசிரியர்கள் மற்றும் உடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களை நேரில் அழைத்து ராஜகோபாலன் முன்னிலையில் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியாகி உள்ளது. இதையடுத்து சக ஆசிரியர்கள் அளித்த பதிலை போலீசார் வீடியோ பதிவுடன் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தற்போது விசாரணை மற்றும் வாக்குமூலத்தை போலீசார் அறிக்கையாக தயாரித்து வருகின்றனர். 3 நாள் விசாரணை முடிந்து இன்று மாலை 3 மணிக்கு ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

அப்போது சக ஆசிரியர்கள் ராஜகோபாலனுக்கு எதிரான அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மூத்த ஆசிரியர் ராஜகோபாலனுடன் நாங்களும் பாடம் எடுத்து வருகிறோம். வாரத்தில் 3 நாட்களுக்கு ராஜகோபாலன் மதிய உணவு எடுத்து வரமாட்டார். அதற்கு பதில் மாணவிகள் கொண்டு வரும் உணவுகளை வாங்கி சாப்பிடுவார். இதை ஆசியர் மாணவிகளுக்கு இடையே நல்லூறவு ஏற்படுத்தும் என்று நாங்கள்(ஆசிரியர்கள்) நினைத்தோம். ஆனால், ராஜகோபாலன் தவறான எண்ணத்தில் தான் மாணவிகளிடம் பழகி வந்தது எங்களுக்கு போகபோக தான் தெரியவந்தது.

பள்ளி நிர்வாகத்திடம் ராஜகோபாலன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவரின் தவறுக்கு ஒரு வகையில் நாங்களும் காரணமாக ஆகிவிட்டோம். அதேநேரம் சில ஆசிரியர்கள், ராஜகோபாலனிடம், இது தவறு.. மாணவிகள் நமக்கு மகள்கள் போன்று என்று அறிவுரை வழங்கி உள்ளனர். அதற்கு ராஜகோபாலன் ‘எனக்கு தான் பிள்ளைகளே இல்லையே.... அப்புறம் எதற்கு நான் மாணவிகளை மகளாக நினைப்பது என்று எகத்தாளமாக கூறுவார். என் விஷயத்தில் நீங்கள்  தலையீடாதீர்கள் என்று கூறுவார். இதன் பிறகு சக ஆசிரியர்கள் அவரை கண்டுக்கொள்வதில்லை.

ஆனால், 11 மற்றும் 12ம் வகுப்பு பொருளாதார ஆசிரியர் மட்டும் பலமுறை மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து வரும் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலனை கண்டிப்பார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதன்படி பத்மா சேஷாத்திரி பள்ளியின் பொருளாதார ஆசிரியரை நேற்று முன்தினம் இரவு அசோக் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த ஆசிரியர், பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளை ஏமாற்றி பலமுறை பாலியல் தொந்தரவு செய்து வந்தது உண்மைதான். இதை பலமுறை நான் நேரில் பார்த்து ராஜகோபாலனை கண்டித்து இருக்கிறேன்.

 பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் என்னிடம் கூறி அழுதுள்ளனர். நான் அவர்களிடம் ராஜகோபாலனிடம் கவனமாக இருங்கள் என்று கூறி சமாதானம் செய்வேன். என்னுடன் பணியாற்றிய சக ஆசிரியர் ராஜகோபாலன் என்றாலும், அவரது தவறை ஒரு நாளும் நான் மன்னிக்க மாட்டேன். ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசாரிடம் அளித்துள்ள புகார்கள் அனைத்தும் 100 சதவீதம் உண்மைதான். அவருடன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சக ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சக ஆசிரியர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

* குழந்தைகள் நல ஆணையத்தில் டீன், முதல்வர் இன்று ஆஜராக உத்தரவு

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு பத்மா சேஷாத்திரி பள்ளி டீன் மற்றும் முதல்வர் நேரில் ஆஜராக கடந்த மாதம் 31ம் தேதி சம்மன் அனுப்பியது. தற்போது, பத்மா சேஷாத்திரி பள்ளி டீன் மற்றும் முதல்வர் இன்று (4.6.2021) காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று இரண்டாவது முறையாக பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு சம்மன் அனுப்பி

உள்ளனர்.

Related Stories: