பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கே சென்று நேரில் விசாரணை நடத்தப்படும்: மகளிர் ஆணைய தலைவி பேட்டி

சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக மகளிர் ஆணைய தலைவி கவுரி அசோகன் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே பிரபல சாமியார்  சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில்ஹரி பன்னாட்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு சி.பி.எஸ்.இ, மாநில பாடத்திட்டம், மாண்டிசோரி ஆகிய 3 வகையான பிரிவுகள் உள்ளன. மேலும், பள்ளி வளாகத்திலேயே தங்கிப் படிக்கும் வசதியும் உள்ளது.

இந்த பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள் சாமியாரின் பக்தர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் அப் குரூப் ஒன்றை தொடங்கி, அதில் தொடர்பில் இருந்தனர். கடந்த வாரம் சென்னை பள்ளியின் விவகாரம் வெளியில் வந்தபோது அதுபற்றியும் இந்த குரூப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது குழுவில் இருந்த மாணவி ஒருவர், அப்பள்ளியில் படித்தபோது சாமியாரால் தனக்கு பாலியல் ரீதியாக காம இச்சைக்கு பயன்படுத்திய கசப்பான அனுபவத்தை பதற்றத்துடன் பகிர்ந்து, பதிவு செய்திருந்தார். வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து பரவிய இந்த கசப்பான சம்பவத்தை வைத்து தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி கவுரி அசோகன் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பள்ளி நிர்வாகிகள் மற்றும் பராமரிப்பாளரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி கவுரி அசோகன் கூறியதாவது: பாலியல் புகார் சம்பந்தமாக தொலைபேசியில் வந்த புகாரின் பேரில் புதுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொரோனா ஊரடங்கு என்பதால் பள்ளியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர், யாரும் இல்லை. எனவே, ஆன்லைன் வகுப்பு மட்டும் ஆசிரியர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக வந்த புகாரின் பேரில் அலுவலர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களிடம் விசாரணை செய்தபோது எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நேரடியாக அவர்களது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தப்பட உள்ளது. ஆகவே சாமியாரால் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் பாலியல் சீண்டல் சம்பந்தமாக புகார் அளிக்க முன்வரவேண்டும். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: