விஜயவாடா, ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் சரக்கு விமானத்தில் சென்னை வந்தது

மீனம்பாக்கம்: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வென்டிலேட்டர்கள், 25 டிராலியுடன் கூடிய வென்டிலேட்டர்கள் சென்னை வந்தன. மேலும் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஜெர்மனியில் இருந்து 4 சரக்கு விமானத்தில் வந்தன. கொரோனா வைரஸ் 2ம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பயனாக கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. நோயாளிகளுக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அரசு பெருமளவு வரவழைத்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானம் நேற்று மாலை சென்னை பழைய விமான நிலையம் வந்தது.

அதில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வென்டிலேட்டாகள், டிராலியுடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டர்கள் 25 மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்தன. இந்திய விமான படையினர் கண்காணிப்பில் விமான நிலைய லோடர்கள், அந்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பார்சல்களை கீழே இறக்கி, விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள், வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதேபோல ஜெர்மனியில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில், 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. சுங்கத்துறையினர், மருத்துவ உபகரணங்களுக்கான முன்னுரிமை அளித்து உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: