வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழுவில் மது விற்ற 2 பேர் கைது-மதுபான பாட்டில்கள் பறிமுதல்

திருப்பத்தூர் : வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு மூலம் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.தமிழக அரசு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் முட உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கள்ளச்சாராயம், மதுபான பாட்டில்கள் என பல்வேறு  இடங்களில் விற்பனை செய்து வரும் வேளையில் காவல் துறையினர் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து மதுபானம் விற்பனை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படுஜோராக நடைபெற்றது.

இந்நிலையில் வாணியம்பாடியில் சிலர் கர்நாடக மதுபான சரக்கு  குழு என்ற வாட்ஸ் அப் குழு துவக்கியுள்ளனர். இந்த குழுவில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், இந்த குழுவில் தொடர்புள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த குழு மூலம் மது விற்பனை நடந்து வருகிறது.

இதில் வெளிமாநில மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட்பட அனைத்துமே சலுகை விலையில் தருகின்றனர்.  மேலும், மதுபானம் வாங்க விரும்புவோர் அவருடைய வாய்ஸ் மூலம் அந்த குழுவில் பதிவு செய்வார்கள். உடனடியாக குரூப் அட்மின் மற்றும் அதில் இருப்பவர்கள் அவர்களிடம் உள்ள மதுபான பாட்டில்கள் விவரம் மற்றும் விலையை உடனடியாக வாய்ஸ் மூலம் பதிவு செய்து வருகிறார்கள். மேலும் ஊரடங்கு காலம் என்பதால் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, அந்த இடத்திற்கு சென்று மதுபானம் பெற்று கொள்ளலாம் என குரூப் அட்மின் உத்தரவு பிறப்பிக்கிறார். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று மதுபானம் பெற்றுக்கொள்கின்றனர்.

இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்பி விஜயகுமார் அந்த நபர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் வாணியம்பாடி எஸ்பி தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டு, வாட்ஸ் அப் குழு அமைத்து மது விற்பனை செய்ததாக வாட்ஸ் அப் குழு அட்மின் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன்(25), அவரது நண்பன் நியூ டவுன் பகுதியை சேர்ந்த சரவணன்(24) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து, வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: