வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான இஎம்ஐ கடன் கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய துறைகளைத் தவிர மற்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலையின்றி மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். குறிப்பாக, பொதுமக்கள் வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை (இஎம்ஐ) வசூலிப்பதை, நிலைமை சீராகும் வரை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறுத்திவைக்க ரிசர்வ் வங்கி மூலம் அறிவிப்பு செய்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.  

கடந்த ஆண்டு கொரோனா முடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அவகாச நடவடிக்கை காரணமாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன், கடன் அட்டை (கிரெடிட் கார்டு) என பல்வேறு பிரிவுகளில் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வந்தவர்கள் பயனடைந்தனர். அதுபோன்றதொரு அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட, தமிழக அரசு மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் தந்து, மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: