சுனாமிக்கே இயற்கை அரணாக இருந்தன எதிர்கால சந்ததிக்காக மலைகள் காடுகளை பாதுகாக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சுனாமி வந்தபோது இயற்கை அரணாக மாங்குரோவ் காடுகள் இருந்தன. எனவே மலைகள் மற்றும் காடுகளை எதிர்கால சந்ததிக்காக பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ள ஐகோர்ட் கிளை, கல்குவாரி உரிமத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது.   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சந்தானம், சபரிமலை ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் தாலுகா அயன்கொல்லன்கொண்டான் திருப்பணிமலையில் உள்ள கல் குவாரியில் கற்களை வெடிமருந்துகள் வைத்து வெட்டியெடுக்கின்றனர். இதனால் சுற்றியுள்ள விவசாய நிலங்களும், கூலி தொழிலாளர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். நீர்நிலைகளையும், மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த நடைபாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குவாரியை மூட ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். குவாரி செயல்பட தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவு: குவாரி உரிமம் என்ற பெயரில் பல்வேறு மலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மலைகள், மலைக்குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இயற்கையின் கொடை. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும். இயற்கையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சுனாமி வந்தபோது மாங்குரோவ் காடுகள் இயற்கை அரணாக இருந்தன.  அதேபோல் மலைகள் தான் கிராமங்களின் பாதுகாப்பு அரணாக உள்ளன. இதனால் மலைகள், மலைக்குன்றுகளை அழிக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும். இந்த வழக்கில் குவாரி உரிமம் வழங்கப்பட்டுள்ள மலையில் ஏற்கெனவே மகளிர் சுய உதவிக்குழுவுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்களை வைத்து குவாரி நடத்தினர். ஆனால் தற்போது வெடி வைத்து மலையில் பாதியளவு தகர்க்கப்பட்டுவிட்டது. இனிமேலும் உரிமத்தை தொடர்ந்தால் மலை முழுமையாக அழிக்கப்படும்.  எனவே, திருப்பணி மலையில் குவாரி நடத்த வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படுகிறது. உரிமம் பெற வழங்கிய பணத்தை திரும்ப கேட்டு உரிமம் பெற்றவர் மனு அளிக்க வேண்டும். அவருக்கு 8 வாரத்தில் பணம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories: