தேடுதல் குழு அறிவிப்பு: அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடுதல்  குழு அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை நியமிப்பதற்காக,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த மார்ச் மாதம் தமிழக உயர்கல்வித்துறைக்கு சில பரிந்துரைகளை அனுப்பினார். அதன் பேரில்  தமிழக உயர்கல்வித்துறை 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்தது. அதில்  புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஜெகதீஷ்குமார் ஒருங்கிணைப்பாளராகவும், தமிழக கூடுதல் செயலாளர் ஷீலாராணி சுங்கத், சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.பி.தியாகராஜன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். .இந்நிலையில்,  தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

துணை வேந்தராக நியமிக்கப்படுபவர் அந்த பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார். விருப்பம் உள்ளவர்கள், தகுதியுள்ளவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள் www.annauniv என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் தனி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான மின்னஞ்சல் முகவரி, nodalofficer2021@annauniv.edu என்று முகவரியில் ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த அறிவிப்பு வெளியான தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இறுதி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்க முடியாது. மேற்கண்ட மின்னஞ்சல் முகவரியின் தவிர பிற வழியில் அனுப்பி வைக்கப்படும் விண்ணப்பங்களும் பரிசீலிக்க முடியாது.  இவ்வாறு தேடுதல் குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: