கொரோனா ஊரடங்கால் வெளிமாநில வரத்து இல்லை: தக்காளி விலை உயர்வு-கடமலை ஒன்றியத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு : கொரோனா ஊரடங்கால் வெளி மாநில வரத்து இல்லாததால், தக்காளி விலை உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை ஆகிய ஊர்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த மாதம் சீசன் தொடங்கியபோது இந்த ஒன்றியத்தில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருந்தது.

ஆனால், ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து இருந்ததால், சந்தைகளில் தக்காளி விலை குறைந்தது. 13 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.50 வரை விற்றது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு, தக்காளிகளை செடியிலேயே பறிக்காமல் விட்டனர்; சிலர் பறித்து சாலையில் கொட்டினர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது.

ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டாலும் தக்காளி விலை கிலோ ரூ.20 முதல் 30 வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், ‘தக்காளிக்கு அரசு நிர்ணய விலை கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: