திருவாரூர் பகுதியில் கோடை கால பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த மானியத்தில் விதை, இடுபொருட்கள்-விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடை சாகுபடி பயிர்களான உளுந்து, எள், பயிறு, கடலை பணப் பயிர்களும் ஆங்காங்கே விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை, எட்டியலூர், கமலாபுரம், மூழ்ங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பல பகுதிகளில் கோடை காலத்தில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் சிறு சிறு பாதிப்புகள் வந்தாலும் ஓரளவிற்கு லாபம் தரும் மகசூலும் கிடைத்து வருகிறது.

இதனால் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் சுமார் 400 ஏக்கர்களுக்கு மேல் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது. இது குறித்து பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக பருத்தி சாகுபடியை மேற்கொண்டு வருகின்றோம். இதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப் படாது. அதிக அளவில் லாபம் இல்லை என்றாலும் பாதிப்பில்லை. சம்பா அறுவடை முடிந்த பிறகு பருத்தி சாகுபடி செய்யலாம்.

இதற்கு 120 நாளிலிருந்து 140 நாட்களுக்குள் முதல் மகசூல் ஆகிவிடும். அடுத்து அதிலே யே சரியான அளவு உரங்கள் மற்றும் இடுபொருட்கள் போட்டு கவனமாக மேற்கொண்டால் 2வது மகசூல் 30லிருந்து 40 நாட்களுக்குள் கிடைத்து விடும்.

2 மகசூல் கிடைப்பதாலும், குவிண்டால் ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை கிடைப்பதாலும் ஓரளவு விவசாயிகளுக்கு அதிக சிரமம் இல்லாமல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு பருத்தி விதைகளை 50 சதவீத மானிய விலையிலும் அதற்கான இடுபொருட்களை இலவசமாக தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: