வேலூர் அருகே கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 12.65 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வேலூர்: வேலூர் அருகே பள்ளிகொண்டா டோல்கேட்டில் கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 12.65 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் பறக்கும் படை தாசில்தார் தலைமையிலான குழுவினர் நள்ளிரவில் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரது தலைமையிலான குழுவினரும், உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரும் இணைந்து நேற்று முன்தினம் இரவு  பள்ளிகொண்டா டோல்கேட் அருகே கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை தாண்டி வேகமாக சென்ற லாரியை சந்தேகத்தின்பேரில் மடக்கி நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 12.65 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளை கைப்பற்றி, வேலூர் பாகாயம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அரிசி கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், குடியாத்தம் அடுத்த நத்தம்மேடு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கே.அரவிந்த்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: