காவிரியில் தூர்வாரும் பணியை கண்காணிக்க கூடுதலாக 49 பொறியாளர்கள் நியமனம்: ஜூன் 12க்குள் பணிகளை முடிக்க உத்தரவு

சென்னை: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், காவிரி ஆற்றை தூர்வாரும் பணிகளை கண்காணிக்க கூடுதலாக 49 பொறியாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்பணிகளை ஜூன் 12க்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பாண்டில் காவிரி ஆறு, வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வார ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இப்பணிகள் பேக்கேஜ் அடிப்படையில் 647 பணிகளாக பிரிக்கப்பட்டு 4061 கி.மீ நீளத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் திறக்கப்பட்டு, ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மற்றும், மிதவை இயந்திரங்களின் உதவியுடன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரிரு நாளில் முழு வீச்சில் தூர்வாரும் பணிகளை தொடங்கி, ஜூன் 12க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இதற்கிடையே இப்பணிகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 8 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் காவிரியில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க கூடுதலாக பொறியாளர்களை நியமனம் செய்து நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் 40 பேர், உதவி செயற்பொறியாளர் 7 பேர், செயற்பொறியாளர் 2 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திருச்சி நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உத்தரவின் பேரில் செயல்பட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தூர்வாரும் பணிகள் முடியும் வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டும். பணிகள் குறித்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: