ஜூன் 2ம் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வாய்ப்பு!: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துவர் என்று எதிர்பார்ப்பு..!!

சென்னை: தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடையே சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜூன் மாதம் 2வது வாரத்தில் உரை நிகழ்த்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மே 11ம் தேதி தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. கூட்டத்தின் முதல் நாளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இரண்டாவது நாளன்று போட்டியின்றி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகர் அப்பாவு பதவியேற்றுக்கொண்டார். 

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் புதிய சபாநாயகர் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர். இதன்பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் உரை, முழுமையான நிதிநிலை அறிக்கை மற்றும் துறை ரீதியான மாநில கோரிக்கை விவாதம் நடத்தப்பட வேண்டும். ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதால் 2ம் வாரத்தில் ஆளுநர் உரை மட்டும் நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு, முழு நிதிநிலை அறிக்கை மற்றும் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.  கொரோனா தொற்று காரணமாக கலைவாணர் அரங்கில் தனிமனித இடைவெளியுடன் நடக்க திட்டமிட்டுள்ளனர். 

Related Stories: