கொரோனா நோய் தொற்றுக்கு அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு: அரசியல்கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், கொரோனா நோய் தொற்றுக்கு உயிரிழந்தார். அரசியல்கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் (92). இவர் வாணியம்பாடியில் பிறந்தவர். தலைசிறந்த கல்வியாளராக திகழ்ந்தவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு முறை துணைவேந்தராக பதவி வகித்துள்ளார். 1996-2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். இவர் பதவியில் இருந்தபோது கல்வியில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.

அனந்தகிருஷ்ணனின் பரிந்துரையின்படி, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. முதன்முறையாக செமஸ்டர் கல்வி முறையை கொண்டு வந்தவர். ஐ.நா. சபையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். இந்திய தூதரகங்களில் அறிவியல் ஆலோசகர் என்னும் பதவியை உருவாக்கினார். இந்த நிலையில், அனந்தகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அனந்தகிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: