கொரோனா தொற்றால் உயிரிழந்த நியாயவிலைக்கடை பணியாளர்கள் விவரங்களை அனுப்ப வேண்டும்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடை பணியாளர்களின் விவரங்களை அனுப்பி வைக்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் எல்.சுப்பிரமணியன் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் சில விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அவ்வபோது செய்திகள் பெறப்படுகின்றன. கடந்தாண்டில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பெற்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தங்கள் மண்டலத்தை சார்ந்த பணியாளர்களின் விவரத்தினை படிவத்தில் உடனுக்குடன் பதிவாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவ்விவரங்களின் அடிப்படையில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தொகை பெற்று வழங்கவும் முன்மொழிவு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அந்த படிவத்தில் பெயர், பதவி விற்பனையாளர்/கட்டுநர், பணிபுரியும் சங்கத்தின் ெபயர், உயிரிழந்த தேதி போன்ற விவரங்களை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: