ஒரகடம் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி முகாம்: மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்

சென்னை:  பெரும்புதூர் அடுத்த ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள், பைக், கார் தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கொரோனா 2வது அலையை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது,  குறைந்தளவு பணியாளர்களுடன் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

முதல் கட்டமாக, முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நேற்று காலை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.

இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி டி.ஆர்.பாலு, தமிழக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்தத் தொழிற்சாலையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முதல் கட்டமாக 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்பின்னர், அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என தொழிற்சாலை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: