கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் கூடி விளையாட தடை!: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!!

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கூட வளாகங்களுக்குள் மாணவர்கள் நுழையவோ, விளையாடவோ அனுமதிக்கக்கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. 

இந்நிலையில், பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்கள் கூடி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் ஆய்வின் போது பள்ளிக்கூட வளாகங்களில் சிறுவர்கள் குழுவாக விளையாடுவது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார். குழுவாக விளையாடுவது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் இத்தகைய புகார்கள் எழாத வகையில் பணியாற்ற காவலர்களை அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவலர் இல்லாத பள்ளிகளில் யாரும் நுழைய முடியாத வகையில் நுழைவு வாயிலை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

அறிவிப்பு பலகையில் பள்ளிக்குள் நுழையவோ, விளையாடவோ அனுமதி இல்லை என எழுதி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளி வளாகத்தில் மாணவர்களோ, மக்களோ கூடும் போது தகவல் தெரிவிக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கும் தகவலை காவல் நிலையத்திலோ, கிராம நிர்வாக அலுவலரிடமோ தெரிவித்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளி வளாகத்திற்குள் தேவையற்ற வகையில் கூடுவதற்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு என்பதால் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

Related Stories: