கோயில்களின் நிதிநிலை அறிக்கை இணையதளத்தில் வெளியிட முடிவு: தவறுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: கமிஷனர் குமரகுருபரன் எச்சரிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதி நிலை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கோயில்களின் சொத்து விவரங்கள், புனரமைப்பு பணிகள், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் பார்வையில் படும்படி இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.  சட்ட பிரிவு 86ன்படி, அறங்காவலர்கள் குழுவினர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இறுதிக்குள் பட்ஜெட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

இதையடுத்து hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்ட விவரங்களையும் வெளியிட வேண்டும். இந்த நிதிநிலை அறிக்கையில் முறைகேடு நடப்பது கண்டறியப்பட்டால், விதிகளை மீறும் அறங்காவலர் சட்டப்பிரிவு 53ன் மீது  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தவறுக்கு துணை போன செயல் அலுவலர்கள் மீது  தமிழ்நாடு சிவில் சர்வீஸ் சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: