வீரர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லை; மத்திய படையின் பாதுகாப்பும் வேணாம்... ஒண்ணும் வேணாம்! புலம்பி தள்ளும் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள்

கொல்கத்தா: மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்களுக்கு மத்திய படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால், வீரர்களுக்கான வசதிகளை செய்து தரமுடியாமல் பல எம்எல்ஏக்கள் புலம்பி வருகின்றனர். சில எம்எல்ஏக்கள் தங்களுக்கு மத்திய படையின் பாதுகாப்பு வேண்டாம் என்றும் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற 77 பாஜக எம்எல்ஏக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை வழங்கியது. அதையடுத்து அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்), மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎப்) மூலம் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுவேந்து அதிகாரிக்கு ஏற்கெனவே ‘இசட்’ பிரிவின் கீழ் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி 61 எம்எல்ஏக்களுக்கு ‘எக்ஸ்’ பிரிவின் கீழும், அதற்கு அடுத்த உயர் பிரிவான ‘ஒய்’ பிரிவின் கீழ் 15 எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணங்களுக்காக எம்எல்ஏக்களுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், அந்த வீரர்கள் எந்த நேரமும் எம்எல்ஏக்களை சுற்றிசுற்றி வருவதால், அவர்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சிரமங்களை சந்திப்பதாகவும் கருதுகின்றனர். அந்த வகையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தங்களுக்கு மத்திய படையின் பாதுகாப்பு தேவையில்லை என்றும், வழக்கம்ேபால் மக்களோடு மக்களாகவே இருக்க விரும்புவதாக மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலம் ஷால்டோரா தொகுதி பாஜக எம்எல்ஏ சந்தனா பவுரி சாதாரண கூலித்தொழிலாளி சாதாரண மண் வீட்டில் வசித்து வருகிறார். திடீரென எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டதால், அவரது வீட்டில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தனா பவுரி எங்கு சென்றாலும், அவர் பின்னால் சென்றுவருகின்றனர். அவரே தனது 5 பாதுகாவலர்களுக்கும் சமைத்து உணவளித்து வருகிறார். இது குறித்து சந்தனா கூறுகையில், ‘பாதுகாப்பு வீரர்கள் தங்குவதற்கு எங்களிடம் வீடு இல்லை. எனவே வாடகைக்கு வீடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்களது வீட்டில் கதவுகள் இல்லை; ஜன்னல்கள் இல்லை. விதிகளின்படி, வீரர்கள் தாங்களாகவே சொந்த சமையல் மற்றும் உணவை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

ஆனால் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்பதால், நானும், என் மாமியாரும் சமைத்து உணவு வழங்குகிறோம். அவர்கள் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு ரொட்டி உணவு பிடிக்கும். ஆனால் நாங்கள் அரிசி மற்றும் முரி உணவை சமைத்து கொடுக்கிறோம். வீரர்களை பார்த்து எனது 4 வயது மகனும், அவர்களை போன்ற ஆடைகளை வாங்கி கேட்டான். அதனையும் வாங்கி கொடுத்தேன்’ என்றார். இதேபோல், துபான்கஞ்ச் பாஜக எம்எல்ஏ மாலதியின் உலகமும் வளர்ந்துவிட்டது. இவருக்கு நான்கு மத்திய படை வீரர்கள் பாதுகாப்புக்காக உள்ளனர். இரண்டு மாடி வீடு இருந்தும், முதல் தளத்தில் வாடகைக்கு விட்டிருந்தார். அவர்களை உடனடியாக காலி செய்ய சொல்ல முடியாது என்பதால், தற்போதைக்கு வீரர்களை வாடகை வீட்டில் தங்கவைத்துள்ளார். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டை காலி செய்ததும், வீரர்களை அங்கு தங்க வைப்பேன்.

வீரர்களுக்காக தனியாக சமையல் எரிவாயு இணைப்பு ஏற்பாடு செய்து தரும் வரை, அவர்களுக்கு எங்களது வீட்டில் இருந்து சாப்பாடு செல்கிறது’ என்றார். விவசாயியான பங்குரா எம்எல்ஏவான திவாகர் கூறுகையில், ‘எனக்கு சொந்தமான கடை ஒன்று உள்ளது. அங்கு வீரர்கள் தங்கியுள்ளனர். கூட்டுக் குடும்பம் என்பதால், எங்களது வீட்டில் 10 பேர் உள்ளனர். வீரர்கள் உட்பட 15 பேருக்கு தினமும் ஒன்றாக சமையல் நடக்கிறது. நாங்கள் என்ன சாப்பிடுகிறோமோ, அதனையே வீரர்களும் சாப்பிடுகின்றனர்’ என்றார். தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியரான எம்எல்ஏ சின்மே கூறுகையில், ‘எம்எல்ஏவாக ேதர்வான பின்னர், எனது பழைய வேலையை செய்ய நேரம் கிடைக்கவில்லை. எனக்கு பாதுகாப்பு அளிக்கும் 4 வீரர்களும் எங்களது வீட்டில் விருந்தினர்களாக பாவித்து வைத்துள்ளோம்’ என்றார்.

மேற்குவங்கத்தில் பாஜக 77 எம்எல்ஏக்களை பெற்றிருந்தாலும், அவர்களில் பெரும்பாலும் ேவறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் தான். அதனால், அவர்களுக்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால், தற்போது அவர்களுக்கு மத்திய படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய படை வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு எம்எல்ஏக்கள் பல்வேறு இடர்களை சந்தித்து வருகின்றனர். பாதுகாப்பு வீரர்கள் தங்குவதற்கு எங்களிடம் வீடு இல்லை. எனவே வாடகைக்கு வீடு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறேன். எங்களது வீட்டில் கதவுகள் இல்லை; ஜன்னல்கள் இல்லை. விதிகளின்படி, வீரர்கள் தாங்களாகவே சொந்த சமையல் மற்றும் உணவை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என்பதால், நானும், என் மாமியாரும் சமைத்து உணவு வழங்குகிறோம்.

Related Stories: