வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பஸ்சுக்கு அபராதம்

துரைப்பாக்கம்: தமிழகத்தில் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்,  சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நேற்று முன்தினம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்,  என தமிழக அரசு அறிவித்தது.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7.20 மணி அளவில் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று வேதாரண்யத்திற்கு  புறப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை ஆர்டிஓ  அலுவலகம் அருகே வந்த போது, போக்குவரத்து துறை அதிகாரிகள் அதை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர்.

அப்போது, பேருந்துக்கான உரிய வரியை செலுத்தாமல் அதை இயக்கியது தெரியவந்தது. சுமார் 3 மணி நேரம் வரை அபராதம் செலுத்த பேருந்து உரிமையாளர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. பின்னர், பயணிகள் நலன் கருதி,  தனியார் பேருந்துக்கு அபராதம் விதித்து, அதற்கான ரசீதை ஓட்டுனரிடம் வழங்கினர். இதையடுத்து, இரவு 11.30 மணியளவில்  பயணிகளுடன் அந்த பேருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: