வங்கக்கடலில் உருவானது யாஸ் புயல்!: மே 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கிறது.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சென்னை!: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. போர்ட் பிளேரில் இருந்து வடக்கு - வடமேற்கு திசையில் 600 கி.மீட்டர் தொலைவில் யாஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மே 26ம் தேதி ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நான்கு நாட்களுக்கு மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் விமானப்படை களமிறங்கியுள்ளது. நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் நிவாரணப் பொருட்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி கடந்த சனிக்கிழமை மே 22 உருவானது. 

இது சனிக்கிழமை மாலை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்தது. குறிப்பாக, அந்தமான் தீவுகள் போா்ட் பிளேயருக்கு வடக்கு-வடமேற்கே 560 கி.மீ. தொலைவிலும், ஒடிஸா மாநிலம் பாரதீப்பிற்கு கிழக்கு-தென்கிழக்கு 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இந்நிலையில் இப்புயல் தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. 

Related Stories: