மேட்டூர் அணை ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு திறப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நீர் பங்கீட்டை கர்நாடகா முழுமையாக வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக நீர்வளத்துறை கடிதம்

சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 177.25 டிஎம்சி நீர் கர்நாடகா அரசு தர வேண்டும். ஆனால், இந்த நீரை முழுமையாக கர்நாடகா வழங்கியதில்லை. இதை தொடர்ந்து காவிரி நீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க காவிரி ஆணையம், காவிரி முறைப்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் ஒவ்வொரு மாதமும் தமிழகத்துக்கு கர்நாடகா தர வேண்டிய நீரின் அளவை நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கர்நாடகா சார்பில் அணைகளில் இருந்து எடுக்க வேண்டிய நீரின் அளவையும் தீர்மானித்துள்ளது. ஆனால், கர்நாடகா சார்பில் அணைகளில் இருந்து இஷ்டத்திற்கு தண்ணீரை எடுத்து ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி திறக்க மறுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு உரிய நீரை தராமல் ஏமாற்றி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 2.5 டிஎம்சிக்கு பதிலாக 2 டிஎம்சியும், மார்ச் மாதத்தில் 2.5 டிஎம்சிக்கு பதிலாக 1.5 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது. ஏப்ரலில் மட்டும் 2.8 டிஎம்சி வரை தந்துள்ளது. மே மாத தவணைப்படி 2.5 டிஎம்சிக்கு பதிலாக 20ம் தேதி வரை 2.1 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 61 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதைகொண்டு வரும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முடியும். ஆனால், கூடுதலாக சாகுபடிக்கு தண்ணீர் தேவை இருப்பதால் ஜூன் மாதத்தில் தர வேண்டிய 9.19 டிஎம்சி நீரை கர்நாடகா முழுமையாக தர வேண்டும். ஆனால், கர்நாடக அணைகளில் 30 சதவீதம் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி தர மறுக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி  கடந்த 18ம் தேதி நடைபெறவிருந்த காவிரி நீர் முறைப்படுத்துதல் குழு கூட்டத்தில் பேச தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்து இருந்தனர். ஆனால், கொரோனா தொற்றை காரணம் காட்டி அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் எப்போது என்றும் தெரிவிக்கவில்லை.  இதனால், ஜூன் மாதத்தில் முழு அளவில் நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழக நீர்வளத்துறை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளது என்று  நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 97.79 அடி

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியானது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1899 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,887 கனஅடியாக சற்று சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 97.82 அடியாக இருந்த நிலையில், நேற்று காலை 97.79 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 62.01 டிஎம்சி.

Related Stories: