சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிறப்பு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். அந்தவகையில், நேற்று முன்தினம் ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில் 130 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, நேற்று காலை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 130 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது, உலக சுகாதார அமைப்பின் இந்திய மருத்துவ அலுவலர்கள் டாக்டர் கே.என்.அருண்குமார் மற்றும் கே.சுரேந்திரன் ஆகியோர் உலக சுகாதார அமைப்பின் சார்பில் 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.  

இந்த மையத்தில் 130 மருத்துவ படுக்கைகளிலும் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மின்விசிறிகள், நாடித்துடிப்பு அளவிடும் கருவிகள் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: