அரசின் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு: அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உறுதி

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உறுதி தெரிவித்தனர்.  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  ஆலோசனை நடத்தினார்.  கூட்டத்தில், திமுக சார்பில் எழிலன், அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், பாஜ சார்பில் நயினார் நாகேந்திரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் சார்பில் முனிரத்தினம், மதிமுக சார்பில் சதன் திருமலைகுமார், விசிக சார்பில்  எஸ்.எஸ்.பாலாஜி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  சார்பில் ஈஸ்வரன் உள்ளிட்ட 13  பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

காலை 11.30 மணிக்கு ஆரம்பித்த ஆலோசனை கூட்டம் மதியம் 1.30 மணிக்கு முடிந்தது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சட்டமன்ற அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (அதிமுக): முதல் அலையில் ஏற்படுத்தியது போன்று  முழு ஊரடங்கை அமல்படுத்தினால்தான் கொரோனா சங்கிலி தொடரை உடைக்க முடியும் என்று தெரிவித்தோம். வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய  பொருட்களை கொடுக்க வலியுறுத்தினோம். ஆரம்ப நிலையிலேயே நோய் தொற்றை கண்டறிவதுதான் முக்கியம். தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அதிமுகவும் வலியுறுத்தியது.

ஜி.கே.மணி (பாமக): ஒரு வாரத்திற்கு ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்தினோம். கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் கொரோனாவை  ஒழிக்க முடியாது.

சதன் திருமலைகுமார் (மதிமுக): தளர்வின்றி ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை மதிமுக ஆதரிக்கிறது.  பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.  ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): முதல்வரின் தடுப்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். கிராமப்புறங்களில் வீடுகள் தோறும் பரிசோதனை செய்ய வேண்டும். கருப்பு பூஞ்சை நோய் அச்சத்தை மக்கள் மத்தியில் போக்கி நோயை ஆரம்ப  நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும். முழு ஊரடங்கிற்கு முழு ஆதரவை அளிக்கிறோம்.

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக): ஊரக பகுதிகளில்  ஒரு குழுவை ஏற்படுத்தி கொரோனா தடுப்பு மேற்கொள்ள வேண்டும். ஆர்.டி.பிசிஆர்  சோதனையில் நெகட்டிவ் வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மூச்சுத்திணறல்  ஏற்படுகிறதா என்பதை  கண்டறிய வேண்டும். ஊரடங்கை  நீட்டிக்கும் முடிவுக்கு விசிக ஆதரவை தெரிவித்துள்ளது.  ஜவாஹிருல்லா (மமக):  ஊரடங்கினால் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள்  பாதிக்கப்படாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  மேலும், கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதலுக்கான வசதிகளை  அரசு  ஏற்படுத்த வேண்டும்.

ஈஸ்வரன் (கொமதேக): ஊரடங்கை இன்னும்  கடுமையாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மத்திய அரசின் தரப்பில்  இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய தடுப்பூசி தேவையான அளவிற்கு வரவில்லை.  தமிழகத்திற்கு  வர வேண்டிய  தடுப்பூசியை உடனடியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும்.  வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): அனைத்து துறையையும் ஒருங்கிணைத்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆக்சிஜன் படுக்கை வசதியை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். பல்வேறு துறை  சார்ந்தவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை  அரசு வழங்க வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை  மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: