தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய்: ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தீவிர தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கரும்பூஞ்சை என்கிற பிளாக் பங்கஸ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கரும் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய், புற்றுநோயாளிகள், அதிக ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களை மட்டும் தாக்கி வந்த கரும்பூஞ்சை நோய், தற்போது தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையும் தாக்க தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் இந்த கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படாது. அதனால் யாரும் அச்சமடைய வேண்டாம். புற்றுநோய், சிறுநீரக, சர்க்கரை நோய் பிரச்சனைகள் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இதேபோல், இணை நோய்கள் இல்லாதவர்களும் தீவிர தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு தீவிர தொற்றால் நுரையீரல் பாதிப்பு இருப்பதால் ஆக்சிஜன் வசதியுடனும், சிலருக்கு செயற்கை சுவாசத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களின் உயிரை காப்பாற்ற அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எளிதாக கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த கரும்பூஞ்சை நோய் உடலில் எந்த பகுதியிலும் ஏற்படலாம். எலும்புகளைக் கூட அரிக்கும் தன்மை பூஞ்சைக்கு உள்ளது. குறிப்பாக, தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூக்கு, வாய், கண்களின் கீழ் என முகத்தில் பூஞ்சை ஏற்படுகிறது. இதனை கவனிக்காமல் விட்டால் பூஞ்சை அரித்துக் கொண்டு கண்களுக்கு சென்று பார்வை இழப்பை ஏற்படுத்தி விடும்.

அப்போது கண்ணை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி கண்ணை எடுக்கவில்லை என்றால் பூஞ்சை மூளைக்கு சென்றுவிடும். மூளையை பாதிப்படையச் செய்து உயிரிழப்பையும் ஏற்படுத்தும். அதனால், தீவிர கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கடுமையான தலைவலி, கண்களில் வலி, கண்களில் வீக்கம், கண்கள் சிகப்பு நிறமாக மாறுதல், திடீரென்று பார்வை குறைதல், சைனஸ் பிரச்சனை, மூக்கில் வலி, வாய் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற வேண்டும். குறிப்பாக, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

Related Stories: