டான்பாஸ்கோ பள்ளி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 304 படுக்கை கொரோனா வார்டுகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார்

சென்னை:  சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு மற்றும் ராயபுரம் மண்டலம், டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன்  மேல்நிலைப்பள்ளியில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள 104 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு ஆகியவற்றை அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர், வணிக வரித்துறை முதன்மை செயலாளர் சித்திக், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி  மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் 745 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக இதுவரை 845 ஆக்சிஜன் செறிவூட்டிகள்  பெறப்பட்டு உள்ளன.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், தற்போது 200 படுக்கைகள் கொரோனா தொற்றால் பாதிப்படையும் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்  சிகிச்சை அளிக்கப்படும்.  

மேலும், டான் பாஸ்கோ பள்ளியில் 104 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் கட்டில், படுக்கைகள்,  உணவு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி வழங்கப்பட  வேண்டிய மருந்து மாத்திரைகள் போன்றவை மாநகராட்சியின் சார்பில்  வழங்கப்படவுள்ளது.  மேலும்  சுகாதார பணிகள், துப்புரவு பணிகள், கிருமிநாசினி தெளித்தல் போன்ற பணிகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளபட உள்ளன. சிகிச்சை மைய கட்டிடம், குடிநீர், மின் இணைப்பு மற்றும் மருத்துவர்கள் ஆகியவை  டான்பாஸ்கோ  பள்ளி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பாக ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள் பசியின்றி வாழ, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி  பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சங்க தலைவர் ரெ.தங்கம் ஏற்பாட்டில் நேற்று நடந்தது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர்  கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்பு பையினை வழங்கினர்.

Related Stories: