×

இந்தப் பணக்கார வியாதியெல்லாம் எங்களுக்கு ஏன் வருது?

நன்றி குங்குமம் தோழி

ஆயிரம் வார்த்தைகளில் விவரிக்க முடியாததை ஒரு புகைப்படம் விவரித்துவிடும் என்று சொல்வார்கள். ஒரு புகைப்படம், வாழ்க்கையின் வலியை, அழகை ஒரு நொடியில் நமக்கு காட்டி விடுகிறது. வியட்நாம் போரை நிறுத்தியதும் ஒரு புகைப்படம் தான்.

அது பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் குடும்பங்களையும் காப்பாற்றியது. புகைப்படங்களுக்கு மக்களின் மனதை மாற்றும் வல்லமை இருக்கிறது. இதை முழுமையாக நம்பும் அனிதா சத்யம் ஒரு ஆவணப் போட்டோகிராபர்.

‘‘பெண்கள் தனியாக வெளியே செல்வதே ஒரு சாதனையாக இருக்கும் காலத்தில், வெளியே சென்று புகைப்படமும் எடுக்க வேண்டும். முதலில் வீட்டில் இருப்பவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது மட்டுமே புகைப்படம் எடுத்து வந்த அனிதா சத்யம், ஒரு முறை உடல் நலம் சரியில்லாமல் உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலைக்கு போய் திரும்பி வந்த போது, என்ன ஆனாலும் சரி, இனி என் வாழ்க்கையை நான் தான் முடிவெடுப்பேன் என தீர்மானித்து, தொடர்ந்து புகைப்படம் எடுப்பதையே தன் வாழ்க்கையின் இலக்காய் மாற்றிக்கொண்டார்.

இப்போது அனிதா ஒரு ஆவணப் புகைப்படக்காரர். தன் புகைப்படங்கள்  மூலம், உண்மையிலேயே உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களின் அவலத்தை ஆவணம் செய்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை நிறைவேற்றியுள்ளார். அப்படித்தான், தானே புயலின் போதும், அடையாளம் இல்லாமல் மறைந்து போன 6 குடிசை வீடுகளுக்கு பதில், சிறிய கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அனிதா, “புற்றுநோயால் பாதித்த பெண்களை சந்தித்து, அவர்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தோடு திருச்சி சென்றேன்.

அங்கே தான் 32 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தேன். கணவர் பல வருடங்களுக்கு முன்னே அவரை பிரிந்து சென்றுவிட, பத்து வயது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார். அவருக்கு துணையாய் இருப்பது அவரது வயதான சித்தி மட்டுமே. நான் அவரை சந்தித்த போது ஒரு மாத காலம் உயிருடன் இருப்பதே பெரிது என்றுதான் மருத்துவர்கள் சொன்னார்கள்.

அவர் என் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. நேராக வீட்டிற்கு சென்றேன். என்னை பத்திரிகையாளர் என்று நினைத்து, புகைப்படம் எடுக்கவே அனுமதிக்கவில்லை. ‘முடியெல்லாம் இல்ல... வேண்டாம் மேடம்’ என்றார்.

இது உங்க நல்லதுக்காகத்தான்மா, உங்களுக்கு உதவத்தான் இத செய்யறேன் என்று சமாதானம் செய்து, முதலில் திரும்பி நிற்க சொல்லி புகைப்படம் எடுத்தேன். அடுத்து கொஞ்சம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததும் தானாகவே இப்படி நிக்கட்டுமா மேடம் என்று கேட்டு போஸ் கொடுக்க ரெடியாக இருந்தார். நான் ‘அதெல்லாம் வேணாம். நீங்க எப்பவும் போல இருங்க, உங்க வேலைய பாருங்க, நான் எடுக்கறேன்’ என்று சொன்னேன்.

அவர் இருக்கும் வீடு இரண்டு சிறிய அறைகள் தான். நமக்கு ஒரு நாள் காய்ச்சல் வந்தாலும், எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருப்பவர்கள் நம்மை கவனித்துக்கொள்ள நாம் நிம்மதியாய் ஓய்வெடுப்போம். ஆனால், புற்றுநோய் அதுவும் 4-வது ஸ்டேஜ் இருந்த போதும், அவரே தன் 10 வயது மகளை பள்ளிக்கு தயார் செய்து, பள்ளியில் விட்டு அதன் பின் மருத்துவமனைக்கு சென்று கீமோதெரபி எடுத்துக்கொள்வார். தனியாக வீடு வந்ததும் வலியில் ஓரமா ஒதுங்கி ஓய்வெடுக்கிறார்.

அவரே சமைப்பதும், துணி துவைப்பதுமாக, யாரும் இல்லாமல் வாய்விட்டும் சொல்லாமல் தன் வலியை தனக்குள்ளேயே வைத்து மிஞ்சி இருக்கும் நாட்களை கடத்திக்கொண்டிருந்தார். அவருடைய ஒரே கவலை, தனக்கு பின், குழந்தையை யார் கவனித்துக்கொள்வார்கள் என்பதுதான். “இந்தப் பணக்கார வியாதியெல்லாம் எங்களுக்கு ஏன் வருது?” என கவலைப்படும் போது, பதிலாக என்னிடம் மெளனம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

அவருக்கு முதல் இரண்டு மூன்று முறைதான் கீமோதெரபி சிகிச்சைகள் முறையாக அளிக்கப்பட்டது. அடுத்து பணத்தட்டுப்பாடும் கடனும் அதிகமாகவே, அவர் மருத்துவமனைக்கே செல்லவில்லை. அதனால், புற்றுநோய் வயிறு, மூளை என்று சில இடங்களுக்கு பரவியுள்ளது.

நான் அவரின் சிகிச்சையையும் தினசரி வாழ்க்கையையும் படமாக்கி, என் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அனுப்பி உதவிக்கேட்டேன். பல நாள் அதற்கு அலையவேண்டியிருந்தது. பலபேரிடம் கெஞ்சி கேட்டிருக்கிறேன். கடைசியில் எப்படியோ ஐம்பதாயிரம் திரட்டி, கீமோதெரபி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தோம்.

ஆனால் இது ஒரு சிகிச்சைக்குதான். இதே மாதிரி மாதம் நாற்பதாயிரம் தேவை. எங்களால் ஒவ்வொரு முறையும் இப்படி பணம் திரட்ட முடியாது என்ற நிதர்சனம் புரிந்தது. அப்போது தான், ஒரு நண்பர் அவருக்கு எதிர்நீச்சல், தமிழ்படம்-2 போன்ற படங்களில் நடித்த நடிகர் சதீஷை தெரியும் என அறிமுகம் செய்தார்.

அவர் மூலம்தான் சன் டிவியில் விஷால் தொகுத்து வழங்கிய ‘நாம் ஒருவர்’ நிகழ்ச்சி மூலம், முழு சிகிச்சைக்கும், குழந்தையின் படிப்பு முழுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. 50,000 திரட்ட நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் சன் டி.வியில் விஷால் நிவாரணம் கேட்ட போது, மருத்துவ செலவுகள் மட்டுமில்லாமல், குழந்தைக்கு ஒரு நல்ல எதிர்காலமும் உறுதியாகியது. பிரபலங்கள் நினைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது.

நான் திருச்சியில் தங்கியிருந்தபோது, தன்னையும் குழந்தையையும் அங்குள்ள பட்டாம்பூச்சி பூங்காவிற்கு அழைத்துச் செல்ல சொன்னார். ஒரு இடத்தில் புத்தர் சிலையை பார்த்ததும், குட்டி புத்தர் சிலை வேண்டும் என்றார்.

வாங்கிக் கொடுத்தேன். முதல் முறை நான் மருத்துவரை பார்த்த போது, இவர் ஒரு மாதம் தான் இருப்பார் என கூறினார். ஆனால் இப்போது ஒரு வருடம் ஆகிறது. மக்களுக்கு தேவை நம்பிக்கை தான். நம்பிக்கை நிறைந்த ஒருவர் எத்தனை முறை விழுந்தாலும் எதிர்த்து எழுந்து நிற்கும் திராணியுடையவர்களாகிறார்கள்’’ என்றார்.

இளம் பெண் போட்டோகிராபர்களுக்கு நீங்கள் தரும் டிப்ஸ்...

‘‘எப்போதுமே கையில் கேமராவுடன் போனால் நூறு கேள்விகள் வரும். அதிலும் ஒரு பெண் கேமரா எடுத்துச் சென்றால் ஆயிரம் கேள்விகளுடன் மிரட்டல்களும் வரும். சாதாரணமா யாருக்கும் எந்த தொந்தரவும் தராமல் போட்டோ எடுத்தாலும் “நீ ஏன் இத படம் புடிக்குற, அதெல்லாம் எடுக்கக் கூடாது” என சம்மந்தமே இல்லாமல், யார் யாரோ வந்து சண்டை போடுவார்கள். ஆனால், எந்த நேரத்திலும் பயப்படாமல், பயந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், நிதானமாக புகைப்படம் எடுங்கள்.

பெண்களுக்கு பாதுகாப்பு முக்கியம். அதற்காக எங்கேயும் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. துணைக்கு யாரையாவது அழைத்து செல்லுங்கள். நண்பர்களுடன் சென்றால், வீட்டில் தகவல் தெரிவித்த பின்னர் செல்லுங்கள். அடுத்து முக்கியமாக புகைப்படம் எடுக்க வசதியான உடைகளை அணியுங்கள். துப்பட்டா போட்டு, அதை சரி செய்யவே நேரம் போதாது. தேவை என்றால் ஆடைக்கு மேல் ஒரு கோட் அணிந்து எந்த நேரத்திலும் போட்டோ எடுக்க தயாராய் இருங்கள்.

நானும் ஒரு படத்தில் ஸ்டில் போட்டோகிராபராக இருந்தேன். அதில் நான் மட்டும் தான் பெண். டைரக்டர் கட் சொல்லியதும், நடிகர்களை அப்படியே நிற்கச்சொல்லி, லைட்டிங் அப்படியே வைத்து, நிமிடத்தில் படம் எடுக்க வேண்டும். சுற்றி ஐம்பது ஆண்கள். ஆனால் எப்போதும் நம்பிக்கையை இழக்காமல் அளவாக பழகி தைரியமாக இருந்தாலே பாதுகாப்பாக இருக்கலாம்” என்றார்.  

தொடர்ந்து பேசிய அனிதா, “புற்றுநோய் அதிகம் பெண்களையே பாதிக்கிறது. அவர்கள் தான் வீட்டில் அதிகம் கவனிக்கப்படாதவர். வீட்டில் யாருக்கு என்ன ஆனாலும் அம்மா பார்த்துக்கொள்வாள். ஆனால் அவளுக்கு உடம்பு முடியாமல் போனால், குடும்பத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரிவதில்லை. நாட்களை தள்ளிப்ேபாட்டு கடைசி கட்டம் வரை பொறுத்துக்கொண்டு பிறகு தான் டாக்டரிடம் செல்கின்றனர்.
இதனாலேயே புற்றுநோய் இருப்பதை கண்டுபிடிக்க தாமதமாகிறது” என்றார்.

அனிதா தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஆவணம் செய்து, உதவிகள் கிடைக்க முயற்சித்து வருகிறார். உதவி வேண்டுபவர்களும் அல்லது உதவி செய்ய தயாராய் இருப்பவர்களும் அவரை தொடர்பு கொள்ளலாம்.

- ஸ்வேதா கண்ணன்

ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!