தெற்கு அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கும்

சென்னை: தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. இடையிடையே வெப்ப சலனம் காரணமாக வளி மண்டலமேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு சில இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய  மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். 23ம் தேதி வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். வட தமிழகத்தில் இயல்பு நிலையை விட கூடுதலாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரும்.

தமிழக கடலோரப் பகுதி, தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 21ம் தேதி தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கும். அத்துடன், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் 22ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

Related Stories: