தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்: அரசியல் தலைவர்கள் புகழாரம்

சென்னை: தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைகோ (பொதுச்செயலாளர், மதிமுக): முன்னோர் மரபையும், பின்வரும் உலகையும், இணைத்த மையப்புள்ளி கி.ரா.  அவர்கள், நம் நெஞ்சங்களில் என்றென்றும், நிலைத்த புகழுடன் இருப்பார். நூற்றாண்டை வெகு சிறப்பாகக் கொண்டாட, தமிழ்  இலக்கிய உலகம் ஆர்வத்துடன் காத்திருந்த வேளையில், அந்தக் கரிசல் குயில் பறந்து விட்டது.

 ராமதாஸ் (நிறுவனர், பாமக): கி.ரா.வுக்கு அடுத்த மாதம் 99ஆவது வயது  பிறக்கிறது. நூற்றாண்டு கொண்டாடுவார் என அனைவரும் எதிர்நோக்கியிருந்த  நேரத்தில் அவர் மறைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தனது 100வது பிறந்த நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வயோதிகம் காரணமாக புதுச்சேரியில் காலமான  செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.

கரிசல் மண்ணின் கதைகளை எழுதி மண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தியவர். அதோடு கரிசல் வட்டார அகராதியையும் தொகுத்து, வட்டார மொழிக்கு அங்கீகாரம் கிடைக்க உழைத்தவர். தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்று போற்றப்படும்  கி.ராஜநாராயணனின் இழப்பு, தமிழ் இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாததாகும்.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்  கட்சி): கரிசல் இலக்கிய மேதை கி.ராஜநாராயணன்  உடல் அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படும் என்று  முதல்வர் அறிவித்து இருப்பதைப் பாராட்டுகிறோம். அவரது நினைவாக   நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மையம் ஒன்றை அவர் பிறந்த இடைச்செவலில் அமைக்க  வேண்டும் என்றும், அவர் பெயரில் விருது ஒன்றைத் தமிழக அரசு ஏற்படுத்த  வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

எல்.முருகன் (தமிழக பாஜ): சாகித்ய  அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜ நாராயணன் மறைந்த செய்தி  நமக்கெல்லாம் மிகுந்த வேதனையை தருகிறது.

கே.பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): எளிய உழைப்பாளி மக்களின் பாடுகளையே அவருடைய எல்லாப்படைப்புகளும் பேசின. வாய்மொழிக் கதைகளைத் தொகுப்பது,வட்டார வழக்கு அகராதிகளைக் கொண்டுவர பிற படைப்பாளிகளைத் தூண்டுவது,பேச்சு மொழியை உயர்த்திப்பிடிப்பது என்கிற அவரது செயல்பாடுகள் எல்லாமே உழைக்கும் மக்களின் பண்பாட்டை  உயர்த்திப்பிடிக்கும் பண்பாட்டு அரசியலாகவே நாம் பார்க்க வேண்டும். அவர் இறப்பதற்கு முன்பாகக்கூட அண்டரண்டாப்பட்சி என்கிற நெடுங்கதையை எழுதியிருக்கிறார்.

 முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட்): பிரிட்டீஷார் வருகைக்கு முன்னர் கரிசல் கிராமத்து வாழ்க்கை முறையை, அங்கு வாழ்ந்த மக்களின் இயல்புகளை, உறவு முறைகளை விரிவாக எடுத்துக் கூறும் “கோபல்லபுரம்“ படைப்பு சாகித்ய அகாடமி விருது பெற்றது. இலக்கிய உலகின் மின்னும் தாரகை நூறாண்டு காணும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் உதிர்ந்து விட்டது.

ஜி.கே.வாசன் (தலைவர், தமாக): தமிழ் எழுத்துலகின் பீஷ்மர் என்று  போற்றப்படும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற கி.ரா என்று எல்லோராலும் அன்போடு  அழைக்கபடும் கி.ராஜநாராயணன் 7ம் வகுப்பு வரை படித்து எழுத்துலகின்  உச்சத்தை  தொட்டவர். கி.ரா மறைந்தாலும், அவரது எழுத்துக்கள் மக்கள் மனதில்  என்றும் வாழும். மேலும் தமிழக அரசு அவரது பெயரில் இலக்கிய விருது வழங்கி  சிறப்பிக்க வேண்டும்.

டிடிவி. தினகரன் (பொதுச்செயலாளர், அமமுக): முதுபெரும் தமிழ் எழுத்தாளர்,  கரிசல் இலக்கியத்தின் பிதாமகர், பெரியவர் கி.ராஜநாராயனன் காலமானார் சென்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். கதை சொல்லியாக, அழியாத படைப்புகளை  தந்தவராக, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக  திகழ்ந்த கி.ரா மறைவு தமிழுக்கு பேரிழப்பாகும்.

Related Stories:

>