சடலங்களுக்கு மத்தியில் சிகிச்சை கதிர்காமம் மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை திடீர் ஆய்வு

புதுச்சேரி:  புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதியில்லாமல், ஆக்சிஜன் சிலிண்டருடன் தரையில் படுத்துக் கொண்டும், இறந்தவர்களின் சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டும் சிகிச்சை பெறும் வீடியோ வைரலானது.  இதையடுத்து, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அந்த மருத்துவமனைக்கு திடீர் ஆய்வுக்கு சென்றார். கவச உடையணிந்து ஒவ்வொரு வார்டாக சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் அருண், மருத்துவ கல்லூரி இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர், கவர்னர் தமிழிசை கூறுகையில், தினமும் ஆக்சிஜன் படுக்கையை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ, அந்தளவுக்கு உயர்த்த முயற்சி செய்து வருகிறோம். இங்கு கூடுதலாக 300 ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்படுகிறது.

பொது மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகி கொண்டிருக்கிறது. நோயாளிகளை நாற்காலியில் உட்கார வைக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. மூச்சு வாங்கினால் நாற்காலியில் அமர வைத்துதான் சிகிச்சை அளிப்பார்கள்.  இறந்தவரின் சடலம்  நோயாளிகள் மத்தியில் இருந்ததாக தகவலும் வந்துள்ளது. இறந்தவர்களின் உடலை பொட்டலம் கட்டி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இது தவறான வார்த்தை.  இறந்தவர்களின் உடலை வெளியே கொண்டுவந்தால் தொற்று பரவும். அதனால் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி  உடலை சிறப்பு கவசத்தோடு தான் வார்டிலிருந்து எடுத்து வர வேண்டும். புதிதாக 100 செவிலியர்கள், மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளோம் என்றார்.

Related Stories:

>