திருச்செங்கோடு லாரி சங்கம் சார்பில் இலவச மூலிகை நீராவி பிடிக்கும் மையம் துவக்கம்

திருச்செங்கோடு : திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இயக்கப்படும் பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் இலவச மூலிகை நீராவி பிடிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள், சுக்கு, மிளகு, வெற்றிலை, யூகலிப்டஸ் இலைகள், வேப்ப இலை, துளசி, கற்பூரவல்லி போன்ற மூலிகைப் பொருட்களை குக்கர் வழியாக கொதிக்க வைத்து, அதில் இருந்து வரும் நீராவியை பைப் லைன்கள் மூலம் தருகின்றனர். பைப் லைன்களுக்கு கேட் வால்வுகளும் அமைத்து வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நீராவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9 முதல் இரவு 8 வரை இந்த வசதி செயல்படும்.

பெட்ரோல் டீசல் பிடிக்க வரும் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வந்து ஆவி பிடித்து செல்கின்றனர். இந்த திட்டத்தை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாரி கணேசன், செயலாளர் எவரெஸ்ட் ரவி ஆகியோர் துவக்கி வைத்தனர். செயற்குழு உறுப்பினர்கள், மேலாளர் பெருமாள் உடனிருந்தனர். இதனை அமைக்க ₹15 ஆயிரம் செலவானது என்றும், தினசரி ஆயிரம் ரூபாய் மூலிகை பொருட்கள் வாங்க செலவாகுமென்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories: