நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 33 படுக்கைகள்: விரைவில் 100 படுக்கைகள்...மக்கள் நல்வாழ்வு அமைச்சர் தகவல்

துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சியின் 15வது மண்டலம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 100 படுக்கைகள்அமைக்கப்பட்டுள்ளது.  இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்து திறந்து வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையும், சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில்  100 படுக்கைகள்  தயாரித்து மருத்துவ  சேவைக்கு  அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த 100 படுக்கைகளும் இரண்டு நாட்களில்  முழுமையாக ஆக்சிஜன் வசதி செய்யப்பட உள்ளது. தற்போது 33 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

 மீதமுள்ள 67 படுக்கைகளுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் ஆக்சிஜன் வசதி செய்யப்படும். இந்த மையத்தில் கொரோனா தொற்று உள்ளவர்கள் அனுமதிப்பதற்கு  முன்னால் இதே மண்டலத்தில் மூன்று இடங்களில் செயல்படுகின்ற ஸ்கிரீனிங்  சென்டரில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா தொற்று அளவை பரிசோதித்து மிதமான தொற்று, சற்று அதிகமான தொற்று, தீவிர தொற்று உடையவர்கள் என பிரித்து  மிதமான தொற்று உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள  அறிவுறுத்தப்படுவார்கள்.

இந்த மண்டலத்தின் பெருங்குடி, காரப்பக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையங்களில் பரிசோதக்கப்படும் நோயாளிகளில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் இங்கு அனுமதிக்கப்படுவர்,’’ இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, 15வது மண்டல சிறப்பு அதிகாரி வீரராகவராவ், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபண்டியன், சோழிங்கநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: