வருமான இழப்பில் சிக்கி தவிக்கும் அரசு!: ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர வாய்ப்பு?

சென்னை: கொரோனா 2வது அலையின் தாக்கத்தை தடுக்க தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள 15 நாட்கள் முழு ஊரடங்கால் அரசுக்கு 2,900 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா தாக்கம் குறையான நிலையே காணப்படுகிறது. இதனால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், தமிழக அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வருமான இழப்பை ஈடு செய்ய டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக டாஸ்மாக் மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தவில்லை. இதனால் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பை ஈடுகட்ட உள்ள ஒரே வருமான ஆதாரம் டாஸ்மாக் வருவாய் என்று அரசு கருதுகிறது. இதனால் ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. 15 நாள் ஊரடங்கில் டாஸ்மாக் வருமானம் 2020 கோடி ரூபாயும், பத்திரப்பதிவுத்துறை வருமானம் 500 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 

இதேபோன்று பெட்ரோல், டீசல் விற்பனை 70 சதவீதம் குறைந்துவிட்டதால் அதன் மூலம் கிடைக்கக்கூடிய மதிப்புக்கூட்டு வரி வருவாயும் குறைந்திருக்கிறது. இதனால் ஊரடங்கால் சிரமத்தில் இருக்கும் மக்களை பாதிக்காத வகையில் அரசின் வருமான இழப்பை ஈடுகட்ட டாஸ்மாக் மதுபானங்களின் விலையை கூட்டுவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: