முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜி.கே.வாசன் 10 லட்சம் நிவாரணம்: நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவியும் நிதியுதவி

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காசோலையாக வழங்கினார். இதுகுறித்து, தமாகா தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்த கருத்தோடு செயல்பட்டு கொரோனாவை படிப்படியாக குறைப்பதற்கு சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றிற்கு உறுதுணையாக செயல்படும் வகையில், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து அளித்தார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் ₹25 லட்சம், நடிகர் ஜெயம் ரவி, அவரது அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, தந்தை தயாரிப்பாளரும், எடிட்டருமான மோகன் ஆகியோர் ₹10 லட்சம், இயக்குனர் வெற்றிமாறன் ₹10 லட்சம் நிதியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக வழங்கினர். இயக்குனர் ஷங்கர் ₹10 லட்சம் நிதியை வங்கி மூலம் அனுப்பி வைத்தார்.

Related Stories: