ஜக்கி வாசுதேவின் யோகி சிலை படம் மாற்றம்... தமிழகத்தின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோவில் படம் இணைப்பு : மதுரை எம்.பி. வரவேற்பு!!

டெல்லி : இந்திய விமான நிலையங்கள் ஆணையம், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆவணத்தை வெளியிட்டது. இதில் ஒவ்வொரு மாநில விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தில் தமிழ்நாட்டை குறிப்பிடும் பகுதியில் கோவை ஈஷா யோகா மையத்தின் யோகி சிலையின் படம் இடம்பெற்றிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., “மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை வைத்துள்ளது இந்திய விமான நிலையங்கள் ஆணையம். @AAI_Official.வன்மையான கண்டனம். உடனே மாற்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மதுரை எம்.பி. சு வெங்கடேசன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன்.

இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள்.@Airports Authority of India, என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: